சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், சென்னை திருவான்மியூர் சவுத் அவன்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மெர்லினா மற்றும் ஆண்ட்ரோ மதிவாணன் தம்பதியின் வீட்டில் கடந்தாண்டு மே மாதம் வீட்டு வேலை செய்வதற்காக, மாதம் 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் அடிப்படையில் பணியில் சேர்ந்துள்ளார்.
ஆனால் அந்த பெண்ணுக்கு பேசியபடி சம்பளம் கொடுக்காமல், மாதம் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஜீலை மாதம் இளம்பெண் பணி செய்ய விருப்பம் இல்லை, சொந்த ஊருக்கேச் செல்வதாக மெர்லினா மற்றும் ஆண்ட்ரோ மதிவாணன் ஆகியோரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மெர்லினா மற்றும் ஆண்ட்ரோ மதிவாணன் தம்பதியினர், இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி வேலை வாங்கியும், அடித்து துன்புறுத்தி முகம், கை, கால் பகுதிகளில் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பொங்கல் அன்று (ஜன.15) மெர்லினா, ஆண்ட்ரோ மதிவாணன் தம்பதி இருவரும் இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு, அவரின் சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விட்டுவிட்டு வந்துள்ளனர். இளம்பெண்ணின் முகம், கை, கால்களில் காயம் இருப்பதைக் கண்ட அவரது தாய், கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனை மூலம் கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், தற்போது பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஆகிய இருவர் மீதும் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வன்கொடுமை சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், ஆபசமாக பேசுவது, தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட இளம்பெண் தான் வேலை செய்த வீட்டில் ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோருடன் பிறந்தநாள் கொண்டாடியது, உணவகத்திற்கு சென்றது போன்ற சந்தோஷமாக இருந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
இதையும் படிங்க: திமுக இளைஞர் அணி மாநாடு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம் - அமைச்சர் பொன்முடி