மூன்று சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசியலில் ஆட்சியைப் பறிகொடுத்துவிடுவோம் என்ற அச்சத்தில் ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்வதற்காக பேரவைத் தலைவர் அவர்கள் எடுத்த நடவடிக்கை தவறானது என்று கூறியுள்ளார். இந்நடவடிக்கைக்கு தடை வேண்டும் என்று உச்சநீதின்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான அமர்வு இடைக்காலத் தடை விதித்தது இதை ஜனநாயகத்தின் வெற்றியாக கருதுவதாக கூறியுள்ளார்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான தாக்கீது முன்னதாகவே கொடுக்கப்பட்டுவிட்டால், அதற்கு பிறகு பேரவைத் தலைவர் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை நீக்குவதற்காக எடுக்கின்ற முயற்சி தோற்றுப்போகும் என்பதைத்தான் சட்ட வல்லுநர்கள் கூறி வந்த நிலையில்தான், இந்த தீர்ப்பு வந்துள்ளதாக கூறியுள்ளார்.
சட்டப்பேரவைத் தலைவர் இதுபோன்ற முயற்சிகளை கைவிட்டுவிட்டு, பேரவையில் எதிர்க்கட்சி கொண்டு வந்திருக்கிற நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்திப்பதுதான் சரியான ஜனநாயக அணுகுமுறையாக இருக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.