தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் சிக்கல் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று காலை நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:
நிலத்தடி நீர் குறைவு காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மெட்ரோ வாட்டர் வழங்கப்படுகிறது. சென்னையின் குடிநீர் ஆதரமாக இருக்கும் நான்கு ஏரிகள் வறண்டுவிட்டன. எனவே அரசு பல வழிகளை கையாண்டு குடிநீர் விநியோகம் செய்துவருகிறது.
சென்னை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.
ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலமாக சென்னைக்கு குடிநீர் கொண்டு வர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட பெருநகராட்சிக்கு 158.42 கோடி ரூபாய், கிராமங்களுக்கு 36 கோடி ரூபாய், நகராட்சிக்கு 56 கோடி ரூபாய், பேரூராட்சிக்கு 16.35 கோடி ரூபாய் என குடிநீர் சிக்கலைத் தீர்க்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு இரண்டு மில்லியன் தண்ணீர் தருவதாக கேரள அரசு கூறியுள்ளது. இதற்காக அம்மாநில அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு நாள் மட்டும் தராமல், தினந்தோறும் 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
ஸ்டாலினும், இங்குள்ள காங்கிரசாரும் கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் பருவமழை பொய்த்ததே. அனைத்து மக்களும் வறட்சியை கருத்தில் கொண்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.
மேலும், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.