திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 7, 8 ஆம் வார்டுகளான ராமலிங்க தெரு, தேசியப்பள்ளி சந்து, ராஜாவீதி பகுதிகளில் கடந்த 15 நாட்களாக முறையான குடிநீர் விநியோகம் இல்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினரிடம் பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் அலட்சியப்போக்குடன் இருந்ததாகத் தெரிகிறது.
குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதியிலிருந்து வருவதாகக் கூறும் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து காலிக் குடங்களுடன் மாரியம்மன் கோவில் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மணப்பாறை - திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினருடன் போராட்டக்காரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு நகராட்சி அதிகாரிகள் தான் வர வேண்டும் என வலியுறுத்தினர். அதனைத்தொடர்ந்து நிகழ்விடத்துக்கு வந்த நகராட்சி பொறியாளர் இரண்டு நாட்களில் குடிநீர் விநியோகம் கிடைக்க ஆவணம்செய்வோம் என உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.