மக்களவைத் தேர்தலையொட்டி மார்ச் மாதம் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு கட்ட வாகன சோதனைகளில் ஈடுபட்டுவந்தனர். இந்தச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் நேற்று முன்தினம் தேர்தல் முடிந்த நிலையில் தேர்தல் பறக்கும் படையினரை திரும்பவும் சோதனை செய்யுமாறு சென்னை மாநகராட்சி அலுவலர்கள் நிர்பந்தப்படுத்துவதாக மாநகராட்சி ஊழியர் புருஷோத்தமன் என்பவர் தேர்தல் அலுவலருக்கு புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘தேர்தல் முடிவுற்ற நிலையில் பறக்கும் படையில் உள்ள காவல் துறை அலுவலர் மற்றும் வீடியோகிராபரை நீக்கிவிட்டு ஒரு மாநகராட்சி அலுவலர் மட்டும் சோதனை செய்யுமாறு பெருநகர மாநகராட்சி சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.
அவர் மட்டும் இந்த வேலையை செய்ய முடியாது. அவர் தனியே சோதனை மேற்கொண்டால் பல்வேறு பிரச்னைகள் எழக்கூடும். இது தேர்தல் விதிமுறையை மீறியதும் கூட. ஆகவே ஒன்று இந்தக் குழுவில் அவர்களை திரும்ப இணைக்க வேண்டும்; இல்லையேல் குழுவை கலைக்க வேண்டும். இதைப்பற்றி தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.