மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் ஐந்து கோடியே 99 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகியவை குறித்த முன்னேற்பாடுகள் பற்றி விவரித்தார். அவர் பேசும்போது அவருக்கு பின்னால் நின்றிருந்த ஒருவர் ஏதோ சைகை செய்துகொண்டே இருந்தார். தலைமைத் தேர்தல் அலுவலர் பேசுவதை அவர் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு புரியும் வகையில் சைகை மொழியில் பேசினார் என்பது பின்னர் பலருக்கும் தெரியவந்தது. தேர்தல் குறித்த முக்கியத் தகவல்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்றடையும் வகையில் இவ்வாறு சைகையில் மொழிபெயர்க்கப்பட்டதற்கு பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.