அரியலூர்: அரியலூர் பெரியார் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர், சின்னதுரை. இவர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "இருசக்கர வாகனத்துக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு பாலிசி எடுத்து அதற்கான ஆவணங்களை பெற்றிருந்தேன்.
எனது வாகனம் கடந்த 28.11.2018-ம் ஆண்டு தீ விபத்தில் சேதம் அடைந்தது. வாகனத்தை சீரமைக்க, அரியலூர் கோல்டன் ஹார்வெஸ்ட் ஆட்டோ ஏஜென்சி நிறுவனத்தில் ஒப்படைக்குமாறு இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்தது. பழுது நீக்க ரூ.17,809 செலவாகும் என ஏஜென்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், முழுத் தொகையையும் செலுத்தினேன்.
ஆனால், காப்பீடு நிறுவனத்திடம் இருந்து ரூ.8,200 மட்டுமே வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ.9,400-ஐ காப்பீடு நிறுவனம் வழங்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது முறையான விளக்கம் தரப்படவில்லை.
இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட எனக்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்க வேண்டும். வழக்கு செலவுக்கு ரூ.20,000 வழங்க உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு விசாரித்தது. நீதிபதி அளித்த தீர்ப்பில், "காப்பீடு பிரீமியம் செலுத்தி முறையான ஆவணம் பெற்றுள்ளவர் நுகர்வோர் தான். களப்பணியாளர் மதிப்பீடு செய்ததன் அடிப்படையில் ரூ.8,200 வழங்கப்பட்டது என காப்பீடு நிறுவனம் கூறுவதை ஏற்க முடியாது.
எனவே, மனுதாரரிடம் இருந்து கூடுதலாக பெறப்பட்ட ரூ.9,400-ஐ காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10,000 மற்றும் வழக்கு செலவுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும்" எனக் கூறினார்.