அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் வேதியியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஆரோக்கியநாதர் நேற்று மாலை வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோது அப்பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியில் நின்று கூச்சல் எழுப்பியும், விசிலடித்தும் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
இடையூறு ஏற்படுத்திய மாணவர்களை அவர் கண்டித்துள்ளார். இதை மனதில் வைத்துக்கொண்டு நேற்று அந்த மாணவர்களில் சிலர் சேர்ந்து வகுப்பறைக்குள் சென்று பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியரை ஒருமையில் பேசி பாடம் நடத்தவிடாமல் இடையூறு செய்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த ஆசிரியர், மாணவன் அஜித்குமாரை அடித்ததாகக் கூறப்படுகிறது. அதில் கோபமடைந்த அஜித்குமார், ஆசிரியரை திருப்பி அடித்துள்ளார். உடனடியாக வகுப்பறையில் இருந்த மாணவ மாணவிகள் அனைவரும் ஆசிரியரைத் தாக்கிய மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பள்ளிக்கு எதிர்புறம் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர், சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்ட மாணவர்கள் பள்ளிக்கு உள்ளே அமர்ந்து வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர் உடையார்பாளையம் மாவட்ட கல்வி அலுவலர் ஹரி செல்வராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரின் உத்தரவுபடி அத்துமீறி வகுப்பிற்குள் நுழைந்து ஆசிரியரைத் தாக்கிய அஜித்குமார் உள்ளிட்ட ஆறு மாணவர்களை தலைமையாசிரியர் இடைநீக்கம் செய்தார். பின்னர், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: கே.எஸ்.அழகிரி சரியான கூமுட்டை -அமைச்சர் செல்லூர் ராஜூ