அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் பகுதியில் உள்ள தோப்பு தெருவில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பு தொழிலை செய்து வருகின்றனர். மழை இல்லாததால் கால்நடைகள் மேய்வதற்கு தழையும், புல்லும் இல்லாமல் உள்ளது. ஆனால், கால்நடைகள் குடிக்கத் தண்ணீர் இல்லாதது பெரும் துயரமாக இருப்பதாகவும், மழை பெய்து ஆறு மாதங்களுக்கு மேலானதால் ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பது மிகவும் சிரமமான காரியமாக உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தோப்புத் தெருவை சேர்ந்த கிராம மக்கள், இளைஞர்கள் அருகிலுள்ள மூங்கில் குட்டையில் நீரை சேகரிக்க முயற்சி செய்தனர். குட்டையை சுற்றி உள்ள பகுதி விவசாயிகளிடம், கால்நடைகளை பாதுகாக்க குட்டைகளில் நீர் நிரப்பும்படி கேட்டுக் கொண்டனர். இதற்கு விவசாயிகளும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்கால் அமைத்து குட்டையில் நீர் நிரப்ப வழிவகை செய்யப்பட்டது. இந்த குட்டைக்கு அருகில் உள்ள தோட்டங்களுக்கு நீர் நிரப்பினர். இதில், தரிசு நிலங்களில் மேய்ந்துவிட்டு வரும் ஆடு, மாடுகள் குட்டையில் தண்ணீர் குடிக்க வைத்து வளர்த்து வருகின்றனர். பக்கத்து கிராமங்களில் இருந்தும் ஆடு மாடுகளை குட்டைக்கு ஓட்டி வந்து தண்ணீர் குடிக்க வைத்து அழைத்து செல்கின்றனர். விவசாயத்தையும் மீறி கால்நடைகளின் தாகத்தை தீர்க்கும் விவசாயிகளுக்கு, கிராம மக்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.