தமிழ்நாடு முழுவதும் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு கட்சிகளின் சார்பில் சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். அவா்களுக்கான வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் பெயரும் அவர்களின் சின்னங்களும் அச்சிடப்பட்டிருந்தது.
ஆனால் ஊராட்சி மன்றத் தலைவர், கிராம வார்டு உறுப்பினா்கள் தேர்தலுக்கான வாக்குச்சீட்டில் வேட்பாளர்கள் போட்டியிடும் சின்னங்கள் மட்டுமே அச்சிடப்பட்டிருந்தது. வேட்பாளர்களின் பெயர் அச்சிடப்படவில்லை. இதனால் வாக்களிக்க வந்தவர்கள் சின்னங்களை மட்டும் வைத்து வாக்களிக்க வேண்டிய நிலை இருந்தது.
மேலும், போட்டியிடுபவர்களின் பெயர்களை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு வாக்களிக்க வந்தவர்களுக்கு சின்னங்கள் மட்டுமே இருந்ததால் யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாமல் தடுமாற்றம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. இது போன்ற நடைமுறையால் ஜனநாயகக் கடமையை மனநிறைவோடு ஆற்ற முடியவில்லை என பொதுமக்கள் பலரும் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து பொதுமக்களில் ஒருவர் கூறுகையில், 'மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடுபவர்களின் பெயர், அவர்களின் சின்னங்கள் அச்சிடும்போது சுயேச்சைகளாக போட்டியிடும் ஊராட்சி மன்றத் தலைவர், கிராம வார்டு உறுப்பினர்களுக்கு சின்னங்களோடு அவர்களின் பெயர்களை அச்சிடாததற்கு என்ன காரணம் என தெரியவில்லை. போட்டியிடுபவர்களின் பெயர்களை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு வாக்களிக்க வருபவர்கள் பெயர்கள் இல்லாமல் சின்னங்கள் மட்டும் இருந்ததால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தெரியாமல் தடுமாறும் நிலை உள்ளது என்றார்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் நடைமுறையில் எவ்வளவோ மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. அப்படியிருக்கையில் இதிலும் மாற்றத்தை கொண்டுவந்து சின்னங்களையும் பெயர்களையும் அச்சிட்டால் வாக்காளர்கள் எந்தவிதமான தடுமாற்றமும் இல்லாமல் வாக்களிக்கமுடியும். பெயர்கள் இல்லாமல் சின்னங்கள் மட்டும் இருப்பது வாக்கு எண்ணிக்கையின்போது குளறுபடிகளை உண்டாக்குவதற்கான வாய்ப்பாக உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: Flashback 2019: சமூக அக்கறையுடன் வெளியான 10 பாலிவுட் படங்கள்