நேற்றைய (அக்.20) தினம் மதிமுக மாநில தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்ட நிலையில் அக்கட்சியில் இருந்து இன்று (அக்.21) ஈஸ்வரன் விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கடந்த 28 ஆண்டுகளாக என் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் பணியாற்றி வந்தேன். கட்சி இட்ட கட்டளைகளை செவ்வனே நிறைவேற்றி உள்ளேன். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அறப்போராட்டத்தின் வாயிலாகவும் சட்டப்போராட்டத்தின் வாயிலாகவும் தொடர்ந்து போராடிவருகிறேன்.
கட்சியில் பொறியாளர் அணி அமைப்பாளர், ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர், இளைஞர் அணி செயலாளர் என்று பல பொறுப்புகளில் மிகச்சிறந்த முறையில் பணியாற்றி வந்துள்ளேன். பெருந்துறை இடைத்தேர்தல் முதல் கடைசியாக பல்லடம் சட்டப்பேரவை தேர்தல்வரை அனைத்து தேர்தல்களிலும் மிகச்சிறப்பாக பணியாற்றி உள்ளேன்.
தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு எதிராக எனது சட்டப்போராட்டத்தின் மூலமாக கோவையில் 10,000 மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இது தான் நான் செய்த மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன். வெள்ளளூர் குப்பைகிடங்கு வழக்கின் மூலம் சுமார் 200 கோடி அளவிற்கு கோவையின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு நிதி ஒதுக்க செய்துள்ளேன்.
கேரளாவில் இருந்துவரும் கழிவுகள் தமிழ்நாட்டிற்குள் வராமல் தடுக்க பல ஆண்டுகளாக போராடி வருகிறேன். மேற்குதொடர்ச்சிமலையை பாதுகாக்கவும், கோயம்புத்தூரின் நதிநீர் திட்ட மேம்பாட்டிற்க்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.
ஏழை, எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளுக்காக எண்ணற்ற போராட்டங்களை செய்துள்ளேன். மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்த மைதானங்கள் தேவை என்பதற்காக சைக்கிள் பயணப்போராட்டங்களையும் செய்துள்ளேன்.
மெட்ரோ இரயில் திட்டம், அகல ரயில்பாதை திட்டம், சாலைவிரிவாக்கத்திட்டம் என கோயம்புத்தூரின் அனைத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்காகவும் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி உள்ளேன். மதுவிலக்கு மராத்தான் போட்டிகளை நடத்தி ஒரு லட்சம் மாணவர்களுக்கும் மேலாக கலந்துகொள்ள வைத்ததில் எனக்கும் பெரும்பங்கு உண்டு.
இந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் இயக்க தோழர்கள் எனக்கு மிகச்சிறந்த ஒத்துழைப்பை தந்ததால் தான் என்னால் சாதிக்க முடிந்தது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. எனது பொதுவாழ்வின் மூலம் கிடைத்த அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி கடுகளவு கூட நான் பலன் அடைந்ததில்லை. அரசியலை எனது சுய லாபத்திற்காக பயன்படுத்தக்கூடாது என்பதை என் கொள்கையாகவே வைத்துள்ளேன்.
கடந்த 28 ஆண்டுகள் எனக்கு எந்த பதவியும் கிடைக்காவிட்டாலும், ஏராளமான பொருள் இழப்புகளை சந்தித்திருந்தாலும், மக்களுக்காக பணியாற்றி பல வெற்றிகளை பெற்றதன் மூலம் இந்த அரசியல் வாழ்க்கை எனக்கு மனநிறைவையே தந்துள்ளது. எதுவும் வீணாகிவிடவில்லை.
ஆனாலும் அரசியலிலும், சமூகத்திலும் நடக்கின்ற பல நிகழ்வுகள் என்னை மிகவும் கோபம் கொள்ள செய்கிறது. இதனை மாற்றவேண்டும் அல்லது தீர்வுகாண வேண்டும் என்று நினைத்தாலும் ஒரு அரசியல் இயக்கத்தில் இருந்து கொண்டு அதனை செய்ய இயலவில்லை. பலமுறை பல சங்கடங்களை சந்திக்க நேரிடுகிறது.
இயக்கத்தின் பொதுவான மனநிலைக்கும் எனது செயல்பாடுகளுக்கும் முரண்பாடுகள் வரத்தொடங்கும் போது நான் இங்கு இயங்குவது இயக்கத்திற்கும் நல்லதல்ல, எனக்கும் நல்லதல்ல. எனது வாழ்நாளில் என் மனதில் நினைக்கும் பல அரசியல், சமூக மாற்றங்களை உருவாக்க நான் சிறு முயற்சியாவது மேற்க்கொள்ள வேண்டும் எனக் கருதுகிறேன்.
எனது சட்டப்போராட்டங்களை தொடரவும், மக்கள் பணிகளை தொடரவும் எனக்கு சிறு அமைப்பாவது தேவைப்படுகிறது. அதனால் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை தொடங்க உள்ளேன். இது அரசியல் இயக்கமல்ல, ஆனால் அரசியலை தூய்மைப்படுத்தவும் பயன்படும்.
நான் நேசிக்கும் தலைவர் வைகோ, என் உள்ளத்தில் பல அடிப்படை கொள்கைகளை விதைத்து விட்டார். அது இன்று மரமாகிவிட்டது. அதை என்னால் வெட்ட இயலவில்லை. எந்தக் காரணம் சொல்லியும் என்னால் சமாதானப்படுத்திக்கொள்ள இயலவில்லை.
என் தலைவரா, அவர் விதைத்த கொள்கையா என்ற போராட்டத்தில் அவரின் கொள்கையே என்னை ஆட்கொண்டுவிட்டது. என்ன செய்வேன் நான். அரசியலில் எனக்கு நேர்மையையும் கண்ணியத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் கற்றுத்தந்த எனது பாசமிகு பொதுச்செயலாளருக்கும், எனக்கும் ஒத்துழைப்பு தந்து எனது போராட்டத்தை வெற்றியடைய செய்தும், என்மீது அன்பு செலுத்திய எனது சக தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது என்று எதை பொதுச்செயலாளர் சொன்னாரோ அது நடப்பதற்கு முன்பே அமைதியாக சென்றுவிட நினைத்து கடிதம் எழுதினேன். ஆனால் பொதுச்செயலாளரின் காந்தக்குரல் என்னை கட்டிப்போட்டு விட்டது.
ஆனால் இன்று கனத்த இதயத்தோடு இமைப்பொழுதும் என்னை நீங்கா என் தலைவரின் இயக்கமான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: பொள்ளாச்சி வழக்கில் எஸ்.ஐ., உள்பட 7 காவலர்கள் சஸ்பெண்ட்!