அரியலூர்: தென்னிந்தியாவையும் கடல் கடந்து தெற்காசியாவையும் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து ஆட்சி செய்த சோழப் பேரரசர் ராஜேந்திர சோழனால் நிறுவப்பட்டது, கங்கைகொண்ட சோழபுரம். சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய இந்த நகரில், 60 ஏக்கர் பரப்பளவில் சோழன் மாளிகை என்று அழைக்கப்படும் மூன்று அரண்மனைகள் கட்டப்பட்டதாக வரலாற்று பதிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கிபி 1026ஆம் ஆண்டில் இருந்து 1036ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்பட்டு ஆட்சியமைப்பு நடைபெற்றதாகவும் அறிய முடிகிறது. இவ்வாறு சிறப்பு வாய்ந்த கங்கைகொண்ட சோழபுரத்தில் தொல்லியல் துறை மூலம் கடந்த 1980, 1981, 1985, 1987 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் பல கட்டமாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் 31 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கங்கைகொண்ட சோழபுரத்தைச் சுற்றியுள்ள ராஜேந்திரசோழன் ஆண்ட பகுதிகளான மாளிகைமேடு, மண்மலை, குருவாலப்பர்கோவில், பொன்னேரி மதகு உள்ளிட்ட பகுதிகளில் ஐந்து கட்டங்களாக இந்த ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்வின்போது, பானை, கூரை ஓடுகள், இரும்பு ஆணி, அலங்காரம் செய்யப்பட்ட கற்கள், வளையல் துண்டுகள், மணிகள், யானை தந்தத்தால் ஆன பொருட்கள், நாணயங்கள், மண்பாண்ட ஓடுகள், சீனநாட்டு ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதனையடுத்து தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகலை மற்றும் கொடுமலையை தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் மாளிகைமேட்டில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி பணிகளை நேற்று (நவ 28) இரவு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட குழிகளில் அறியப்பட்ட கட்டுமான பகுதிகளையும், அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் கண்காட்சியையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.
அப்போது தொல்லியல் துறை அலுவலர்கள் சோழர்களின் வரலாறு, ஆட்சி செய்த பகுதிகள், கிடைத்த வராலாற்று ஆவணங்கள், அகழ்வாராய்ச்சியில் கிடைத்த காசுகள், பானைகள், ஓடுகள், ஆணிகள் உள்ளிட்டவற்றை முதலமைச்சருக்கு விளக்கினர். இதனையடுத்து அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சோழர் கால சிலைகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.
அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கணேசன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொல்.திருமாவளவன், ராசா மற்றும் எம்எல்ஏக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த அகழ்வாராய்ச்சி செயகல்பாட்டுக்கு வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், பொதுமக்களும் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும் 250 ஆண்டுகள் தெற்காசியாவின் தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரத்தை நிறுவி ஆட்சி செய்த சோழப் பேரரசர் ராஜேந்திசோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட உத்திரவிட்ட முதலமைச்சருக்கு, அரியலூர் மாவட்ட மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
மேலும் ஜெயங்கொண்டத்தில் தொடங்கப்பட்டுள்ள அரசு கலைக்கல்லூரிக்கு ராஜேந்திர சோழரின் பெயரை வைத்து, அக்கல்லூரியில் வரலாற்றுத் துறையையும் உருவாக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'தமிழக நடுகல் மரபு' கண்காட்சி: நாய், கோழிக்கும் நடுகல் எடுத்த பண்டைத் தமிழரின் வாழ்வியல் மரபு