அரியலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி 1924ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளியின் வளாகத்தில் தற்பொழுது ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், பெண்கள் மேல் நிலைப்பள்ளியும் தனித்தனியே செயல்பட்டுவருகின்றன. இதில், ஆயிரத்து 800 மாணவ, மாணவிகள் பயின்றுவருகின்றனர். பள்ளி வளாகத்திற்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளிட்டு பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன.
மேலும் இப்பள்ளியில் உள்ள வகுப்பறையில் ஆண்டு பணி நாள்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் ஆசிரியர் பயிற்சிக் கூட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம், மாவட்ட கல்வி அலுவலர் கூட்டம், முதன்மைக் கல்வி அலுவலர் கூட்டம், பள்ளிக் கல்வித் துறை சார்பாக நடைபெறக்கூடிய மாவட்ட அளவிலான அனைத்துவிதமான போட்டிகள், அறிவியல் கண்காட்சி, கண் சிகிச்சை முகாம், பல்வேறு சேவை முகாம்கள், வேலைவாய்ப்புத் திட்டம் முகாம் உள்ளிட்ட பல்வேறு அனைத்துவிதமான நிகழ்ச்சிகள் இப்பள்ளியில் உள்ள வகுப்பறையில் நடைபெறுகின்றன. இவ்வாறு ஆண்டுக்கு 5000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இங்கு நடத்தப்படும் கூட்டத்திற்கு வருகைதரும் அலுவலர்கள், ஆசிரியா்கள் அவர்களது வாகனங்களை பள்ளியின் உள்ளே கொண்டு வந்து நிறுத்துகின்றனர். அப்போது, ஏற்படும் இரைச்சல் சத்தம் மாணவா்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத வகையில் தொந்தரவு செய்கின்றது.
பள்ளியில் உள்ள பாதிக்கு மேற்பட்ட வகுப்பறைகளை அலுவலர்கள் பயிற்சி அறையாகவும், புத்தகங்கள், மிதிவண்டி வைப்பதற்காகவும் ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில், ஆசிரியர்கள் பயிற்சிக் கூட்டத்தின்போது மாணவர்கள் மரத்தின் நிழலில் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இங்கு நடைபெறும் ஆசிரியர்கள் பயிற்சிக் கூட்டத்தில் பெரும்பாலும் ஒலிபெருக்கி மூலமே பேசுகின்றனர். இதனால் மாணவர்களுக்கு படிப்பில் கவனம் குறைவதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆசிரியர்களும் மாணவர்களுக்குச் சரியான முறையில் பாடங்களைப் புரிதல் இல்லாமல் சொல்லிக் கொடுக்கும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.
அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து அரசாணை (நிலை) எண் 683 வருவாய் (வ.நி1(1)) துறை, நாள் 19.11.2007 இன்படி பிரிக்கப்பட்டு, 23.11.2007 முதல் தனி மாவட்டமாகச் செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில் கல்வி அலுவலர்களுக்கான தனியாகக் கட்டடங்கள் இல்லாத சூழ்நிலையால் இதுபோன்று நடைபெற்றுவருகின்றன. கல்வி அலுவலர்களுக்கான அலுவலகம் வாடகை கட்டடங்களில் நடத்துவதற்கும், அதற்கான வாடகையும் செலுத்துவதற்கும் அரசு வழிவகுத்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் அவர்கள் தங்களுடைய அரசுப் பள்ளி கட்டடங்களை ஆக்கிரமித்து மாணவர்களின் படிப்பையும், வாழ்க்கையையும் கேள்விக்குறி ஆக்கியுள்ளனர். அரியலூரில் உள்ள பல்துறை வளாகத்தில் செயல்பட்டுவந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது சொந்த கட்டடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது.
இங்கு செயல்படும் அலுவலகங்களையும், பயிற்சி கூட்ட அறையையும் பல்துறை வளாகத்தில் மாற்றினால் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்தும் சூழ்நிலை அமைய வாய்ப்புள்ளது எனச் சமூக செயற்பாட்டாளர்கள், முன்னாள் மாணவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
அரசுப் பள்ளியில் ஏற்கனவே கல்வித்தரம் குறைவு என்று கூறும் சூழ்நிலையில் இதுபோன்று அலுவலர்கள் நடவடிக்கை மேலும் கல்வித் தரத்தை சீர்குலைக்கிறது என்பது நிதர்சனம்.
இதையும் படிங்க: