அரியலூர்: இடைத்தரகர் இன்றி அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு பெற 'உழவன் செயலி'யை (Uzhavan App) பின் தொடருங்கள் என்று விவசாயிகளை அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,' அரியலூர் மாவட்ட விவசாயிகள் நெல் அறுவடையில் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அறுவடை நேரத்தில் கூலி ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையை சரி செய்ய அறுவடை இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
அறுவடை இயந்திரங்களுக்காக சில நேரங்களில், விவசாயிகள் இடைத்தரகர்களிடம் தள்ளப்படுவதால், தரகு கொடுத்து அறுவடை செலவு அதிகமாவதுடன் மொத்த வருமானமும் குறைகிறது. இந்த பிரச்னையை தீர்க்க வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் அறுவடை இயந்திரங்களை, நேரடியாக உரிமையாளர்களிடமிருந்து பெற உரிமையாளர் பெயர், விலாசம், கைப்பேசி எண்ணுடன் மாவட்ட வாரியாக, வட்டார வாரியாக, உழவன் செயலியின் மூலம் 'வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு' என்ற முகப்பை தேர்வு செய்து 'அறுவடை இயந்திரங்கள் பற்றி அறிய' என்ற துணை முகப்பின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் அதன் தொடர்புடைய வட்டாரத்தை உள்ளீடு செய்து தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் உழவன் செயலிக்குள் சென்று நேரடியாக உரிமையாளரை தொடர்புகொண்டு இடைத்தரகர் இன்றி நெல் அறுவடை இயந்திரங்களை பெற்று பயனடைய வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்றே வெவ்வேறு மாவட்டங்களைச் சார்ந்தவர்களும் இடைத்தரகர் இன்றி, இயந்திரங்களை நேரடியாகப் பெறமுடியும்.
இதையும் படிங்க: போட்டித்தேர்வு வெற்றியாளரா நீங்கள்?: வழிகாட்ட வாங்க.. கலெக்டர் அழைப்பு!