டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் மகளிர் ஹாக்கியில் இந்திய அணி குரூப் 'ஏ' பிரிவில் இடம்பெற்றது. இதில், இந்திய அணி மொத்தம் ஐந்து போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தும், அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்தியும் 'ஏ' பிரிவில் நான்காவது இடத்தில் உள்ளது.
பிரிவில் முதல் நான்கு இடங்களைப் பிடித்தால் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறலாம் என்ற நிலையில் தற்போது 'ஏ' பிரிவில் நான்காவது இடத்தை உறுதிசெய்ய இந்தியாவிற்கும் அயர்லாந்துக்கும் இடையே கடுமையான போட்டி இருந்தது. இன்று நடைபெற்ற கிரேட் பிரிட்டன் அணி, அயர்லாந்து அணி இடையிலான போட்டி தான், இந்தியா காலிறுதிக்குள் நுழையுமா என்பதை முடிவு செய்யும் என்பதால், அப்போட்டிக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், தற்போது கிரேட் பிரிட்டன் அணி, அயர்லாந்தை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது. இதன்மூலம் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.
ஏ பிரிவில் 6 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ள இந்திய மகளிர் அணி, காலிறுதி போட்டியில் சக்தி வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. 41 ஆண்டுகளில், முதன்முறையாக இந்திய மகளிர் ஹாக்கி அணி, காலிறுதிக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் 9ஆம் நாள்: 60-இல் இந்தியா; சீனா தொடர்ந்து ஆதிக்கம்