2019ஆம் ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பரபரப்பானக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றுப் போட்டியில் நட்சத்திர ரோமானிய வீராங்கனை சிமோனா ஹெலப்பை எதிர்த்து போலாந்தின் இகா ஸ்வியாடெக் விளையாடினார்.
இந்தப் போட்டியின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய சிமோனா ஹெலப் முதல் செட்டை 6-1 எனக் கைப்பற்றினார். இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் ஹெலப்பின் அதிரடித் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிகா ஸ்வியாடெக் திணறினார். இரண்டாவது செட்டை 6-0 என சிமோனா ஹெலப் கைப்பற்றி பிரெஞ்சு ஓபன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
பின்னர் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலிய நட்சத்திர வீராங்கனை ஆஷ்லி பார்ட்டியை எதிர்த்து அமெரிக்காவின் சோஃபியா கெனின் ஆடினார்.
இந்த ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இரு வீராங்கனைகளும் சமபலத்துடன் ஆடினர். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் செட் ஆட்டத்தில் 6-3 என ஆஷ்லி பார்ட்டி கைப்பற்றினார். இதற்கு சோஃபியா கெனின் 3-6 என இரண்டாவது செட்டைக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். இதனால் ரசிகர்களிடையே பரபரப்புத் தொற்றிக் கொண்டது.
மூன்றாவது செட்டை ஆக்ரோஷத்துடன் ஆடிய ஆஷ்லி 6-0 எனக் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.