2019ஆம் ஆண்டுக்கான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதிப் போட்டியில் ரோமானிய வீராங்கனை சிமோனா ஹாலெப்பை எதிர்த்து சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-2 என சிமோனா ஹாலெப் கைப்பற்றினார். பின்னர் சுதாரித்துக் கொண்ட பெலிண்டா, இரண்டாவது செட் ஆட்டத்தில் ஆக்ரோஷமாக ஆடினார். இதற்கு ஈடுகொடுத்து ஹாலெப் ஆட, ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இறுதியாக மிகப்பெரிய போராட்டத்திற்கு பின்னர் இரண்டாவது செட்டை 7-6 என்ற கணக்கில் பென்சிக் கைப்பற்றினார். இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டம் தொடங்கியது. இதில் சிமோனா ஹாலெப்பின் தாக்குதல் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாத பென்சிக், மூன்றாவது செட்டை 6-0 என இழந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதை அடுத்து மாட்ரிட் ஓபன் இறுதிப் போட்டிக்கு சிமோனா ஹாலெப் முன்னேறியுள்ளார்.