பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸை எதிர்த்து செக் குடியரசு வீராங்கனை கேத்ரீனா சினியகோவா விளையாடினார்.
கடந்தப் போட்டியில் சினியகோவா உலகின் சிறந்த வீராங்கனை நவோமி ஒசாகாவை வீழ்த்தியிருந்ததால் அவர் மீதான எதிர்பார்ப்பு இப்போட்டியில் பன்மடங்கு உயர்ந்திருந்தது. இந்நிலையில் முதல் செட் ஆட்டம் தொடங்கியதிலிருந்தே கீஸ் தனது ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரை எதிர்த்து சினியகோவா தாக்குபிடிக்க முடியாமல் 6-2 என முதல் செட்டை கீஸிடம் பறிகொடுத்தார்.
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் இரு வீராங்கனைகளும் சரிசமமாய் ஆடினர். ஆனால் தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய மேடிசன் கீஸ் 6-4 என இரண்டாவது செட்டை கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றார்.
இதனையடுத்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவாவை (amanda anisimova) எதிர்த்து ஸ்பெயின் வீராங்கனை அலினா போல்சோவா (alina bolsova) ஆடினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய அனிசிமோவா முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்ற, தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் 6-0 என அபாரமாகக் கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.