டென்னிஸ் விளையாட்டின் மிகவும் பிரபலமான பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர், அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று(அக்.03) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் மூன்றாம் சுற்று ஆட்டத்தில், உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், கொலம்பியாவின் டேனியல் எலாஹி கலனை எதிர்த்து போட்டியிட்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஜோகோவிச் 6-0, 6-3 என்ற கணக்கில் முதல் இரண்டு செட்டையும் கைப்பற்றி, எலாஹி கலனுக்கு அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச், 6-2 என்ற கணக்கில் மூன்றாவது செட்டையும் கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 6-0, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் டேனியல் எலாஹி கலனை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.
இந்த வெற்றியின் மூலம் பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் 71ஆவது வெற்றியைப் பதிவு செய்து, பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் அதிக வெற்றிகளைப் பெற்ற இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார். முன்னதாக டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர், 70 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணி அபார வெற்றி!