ஜூன் மாதத்தில் டென்னிஸ் வீரர்களுக்கும், சம்மேளனத்திற்கும் உதவி செய்வதற்காக ஜோகோவிச்சின் சொந்த தொண்டு நிறுவனம் சார்பாக ஏட்ரியா கண்காட்சி டென்னிஸ் தொடர் நடத்தப்பட்டது. இந்தத் தொடரின் இறுதியில் நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச், டிமிட்ரோவ், கோரிக் ஆகியோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.
இதனால் கரோனா வைரஸ் பரவலுக்கு ஜோகோவிச் வழிவகுத்தார் என பலரும் விமர்சனம் கூறி வந்தனர். இந்நிலையில் கரோனாவிலிருந்து மீண்டுள்ள ஜோகோவிச், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ''ஏட்ரியா டென்னிஸ் தொடர் நடத்தியதால் என் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள், விமர்சனங்களாக இல்லை. மாறாக அது எனக்கு எதிரான வெறுப்பு பிரசாரமாக உள்ளது. கரோனா வைரஸ் பரவலுக்கு யாராவது ஒரு மதிப்புமிக்க நபரை காரணமாக்க பார்க்கிறார்கள். ஏட்ரியா டென்னிஸ் தொடர் அரசின் அனைத்து விதிகளையும் பின்பற்றியே நடத்தப்பட்டது. அதிலிருந்து சில பாடங்களை கற்றுள்ளோம்.
அந்தத் தொடரை நடத்தும் போது எனது எண்ணங்கள் தூய்மையாக இருந்தது. டென்னிஸ் சம்மேளனத்திற்கு உதவ வேண்டும், டென்னிஸ் வீரர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என மனிதத்தன்மைமிக்க ஒரு நிகழ்வை தான் ஏற்பாடு செய்தேன். ஆனால் இப்போது என் மீதான விமர்சனங்கள் வேறு மாதிரியாக மாறி வருகிறது.
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. ஏனென்றால் நியூயார்க்கில் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்த பின்னரே தொடரில் பங்கேற்பது பற்றி முடிவு செய்யவேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: கிரிக்கெட்டர் முதல் பிசிசிஐ தலைவர் வரை தாதா கடந்து வந்த பாதை!