கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் ஒன்றான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் நடைபெறும். இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் தாமதமாவதற்கு வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது.
ஆனால் காற்று மாசு தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலியன் ஓபன் அறிவிக்கப்பட்ட தேதியில் நடக்கும் எனக் கூறப்பட்டது. இதனிடையே இன்று ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் குவாலிஃபயர் சுற்றுப்போட்டிகள் இன்று தொடங்கின.
ஆனால் காட்டுத்தீயால் ஏற்பட்ட மாசு காரணமாக சிலமணி நேரம் தாமதமாகத் தொடங்கப்பட்டது. இதுகுறித்து டென்னிஸ் ஆஸ்திரேலியா கூறுகையில், ''காற்றின் தரம் குறைந்திருந்ததால் பயிற்சி நேரங்கள் ரத்து செய்யப்பட்டன. வீரர்களின் பாதுகாப்பும் உடல்நலனுமே முக்கியமானதாகும்'' என்றனர்.
இந்த குவாலிஃபயர் ஆட்டத்தின் முதல் சுற்றில் இந்திய வீரர் குன்னேஸ்வரன் ஆஸ்திரேலிய வீரர் ஹாரியை எதிர்த்து ஆடினார். அதில் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் குன்னேஸ்வரன் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இதையும் படிங்க: ஹாபர்ட் இன்டர்நேஷனல்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய சானியா மிர்சா இணை!