அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் மாற்றுத் திறனாளி வீரர்களுக்கென்று பிரத்தேயகமாக போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் உலக டென்னிஸ் அரங்கில் மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கான சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. விம்பின்டன் போன்ற கிராண்ட்ஸ்லாம் தொடர்களிலும் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொள்ளும்.
எனவே இந்தப் போட்டிகளில் இந்திய வீரர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அனைத்து இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, இந்திய சக்கர நாற்காலி டென்னிஸ் அமைப்பு, கர்நாடக புல்தரை டென்னிஸ் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து சக்கர நாற்காலி டென்னிஸ் வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள மையத்தில் நடைபெறும் இந்த பயிற்சியில் 18 சீனியர் வீரர்களும், மூன்று சிறுமிகள் உள்ளிட்ட 11 இளைய வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த டென்னிஸ் வீரர்களுக்கு சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் சக்கர நாற்காலி டென்னிஸ் ஜாம்பவானான மார்க் கல்க்மேன், அவரது மனைவி மோனிக் கல்க்மேன் வேன் டெ போஸ்ச் ஆகியோர் பயிற்சிகள் வழங்கினர். மேலும் அவர்கள் வீரர்களுக்கு டென்னிஸ் விளையாட்டின் நுணுக்கங்கள் குறித்தும் கற்றுக்கொடுத்தனர்.
இதையும் படிங்க: சர்வதேச ஹாக்கி நட்சத்திர விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டதில் பெருமை - இந்திய வீராங்கனை