2019ஆம் ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை ஜொகன்னா கொண்டாவை எதிர்த்து செக் குடியரசு வீராங்கனை மார்கெடா வொன்ரோசோவா ஆடினார்.
இதில் தொடக்கம் முதலே இரு வீராங்கனைகளும் சரிசமமாக ஆடியதால், முதல் செட் ஆட்டம் பரபரப்பாக இருந்தது. இறுதியாக முதல் செட்டை 7-5 எனக் கைப்பற்றிய மார்கெடா, இரண்டாவது செட்டில் 7-6 என்ற செட் கணக்கில் வெற்றிப்பெற்று பிரெஞ்சு ஓபன் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.
அதேபோல் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நட்சத்திர ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டியை எதிர்த்து அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா ஆடினார்.
இதன் முதல் செட்டை அபாரமாக ஆடி 7-6 என அனிசிமோவா கைப்பற்ற, இரண்டாவது செட்டை ஆஷ்லி பார்ட்டி 3-6 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். இதனால் ஆட்டம் பரபரப்பானது. வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டத்தில் தாக்குதல் ஆட்டத்தை ஆடிய ஆஷ்லி பார்ட்டி 3-6 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இன்று மாலை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஆஷ்லி பார்ட்டியை எதிர்த்து மார்கெடா ஆடவுள்ளார்.