புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசன், ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி, தபாங் டெல்லி அணியுடன் மோதியது. முன்னதாக, தெலுங்கு டைட்டன்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால், இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது.
இதைத்தொடர்ந்து, ஆட்டம் தொடங்கியது முதலே இரண்டு அணிகளும் சமமான புள்ளிகளை பெற்று வந்தனர். இறுதியில், தபாங் டெல்லி டிஃபெண்டிங்கில் சிறப்பாக விளங்கியதால் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 33-34 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் மூன்றாவது முறையாக தோல்வி அடைந்தது.
இதற்கு முன்னதாக, நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி, யு. பி. யோத்தா அணியை எதிர்கொண்டது. இதில், ஆட்டம் தொடங்கியதில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பெங்கால் அணி 48-17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது. நாளை நடைபெறவுள்ள போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, தபாங் டெல்லி அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.