ஆசிய குத்துச்சண்டை போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற மகளிர் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல் 5-0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில், வியாட்னாமை சேர்ந்த உயான் டூ நஹாவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், ஆடவர் 91 கிலோ எடைப்பிரிவு ஆட்டத்தில், காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் சதிஷ் குமார் 5-0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் ஈரானின் இமானை தோற்கடித்து காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றார்.
இதைத்தொடர்ந்து, இந்திய வீரர்களான தீபக் (49 கிலோ), ரோஹித் டோகாஸ் ( 64 கிலோ) மற்றும் ஆசிஷ்(69 கிலோ) ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தனர். முன்னதாக, மகளிர் 81 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா ராணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் பதக்க வாய்ப்பை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.