ஹரியானா மாநிலத்தின் ஹிசார் பகுதியில் வசித்துவருபவர் ஹிமானி மாலிக். 18 வயதேயாகும் இவர், சில நாள்களுக்கு முன்னதாக நடந்த தெற்காசிய சாம்பியன்ஷிப் போட்டியின் வில்வித்தையில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.
மத்திய அரசின் மூன்றாவது கேலோ இந்தியா யூத் கேம்ஸ் போட்டிகள் வரும் 10ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை கவுகாத்தியில் நடைபெறவுள்ளது. இதன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், "இந்த ஆண்டு ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் இடம்பிடிப்பதே தற்போதைய இலக்கு. ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச்சுற்று வரும் 17,18ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. 2018ஆம் ஆண்டு நடந்த யூத் ஒலிம்பிக் போட்டிகளில் என்னால் பதக்கத்தைக் கைப்பற்ற முடியவில்லை. ஆனால் இந்த ஆண்டு நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்வதே முக்கிய இலக்காக நிர்ணயித்து பயிற்சி மேற்கொண்டுவருகிறேன்.
கேலோ இந்தியா யூத் கேம்ஸ் இளைஞர்களுக்கு மிகச்சிறந்த விளையாட்டுச் சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று பல்வேறு விளையாட்டு வீரர்களை ஒரே இடத்தில் பார்ப்பது விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். விளையாட்டினால் அவர்களின் எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை கிடைக்கும்" என்றார்.
இதையும் படிங்க: சிறந்த இளம் வீராங்கனை விருதை தட்டிச்சென்ற கிராமத்துப் பெண்!