விளையாட்டின்போது விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் அதிர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சிலருக்கு அதிர்ச்சிகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் அவர்களின் வாழ்க்கையைக் கூட புரட்டிப்போட்டுவிடும். மூளையில் ஏற்படும் அதிர்ச்சிகளைக் கண்டறிய எந்தவொரு கருவியும் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், தற்போது மிச்சிகன் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மூளையில் ஏற்படும் அதிர்ச்சிகளை அறிய புதிய மருத்துவக்கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
மூளையின் செல்கள் அதிர்ச்சியினால் பாதிக்கப்படுவதை அறிவதற்காக, இன்ஃப்ரா - ரெட் லேசரின் (infra red laser) உதவியுடன் மருத்துவக்கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியின் மூலம் நோயாளிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் அதிர்ச்சியால் பாதிப்படுவதை எளிதாகக் கண்டுபிடிக்க உதவும் வகையில் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருவி மனிதர்களின் நெற்றியில் வைத்துப் பரிசோதனை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், இன்ஃப்ரா ரெட் லைட்டை அனுப்புவதற்காக ஆப்டிக்கல் ஃபைபர் (optical fiber) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நெற்றியில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நேரடியாக மூளையில் உள்ள முக்கிய மூளைக்கூறான சைட்டோக்ரோம் சி ஆக்டேஸ் (cytochrome C oxidase) என்றவற்றுடன் தொடர்புகொள்ளும்.
ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருவியின் மூலம் மனிதனின் மூளைக்குச் சரியாக ஆக்ஸிஜன் கிடைக்கிறதா என்பதை மட்டுமே கண்டறிய முடியும். ஆனால் இந்தப் புதிய தொழில்நுட்பத்தால், மூளைக்குக் கிடைக்கிற ஆக்ஸிஜனை, மூளையால் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறதா என்பதைக் கண்டறிய உதவும் என மிச்சிகன் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதன்மூலம் விளையாட்டின்போது ஏற்படும் அதிர்ச்சிகளை உடனடியாகக் கண்டறிய முடியும் என்பதோடு, மருத்துவர்கள் விரைவாக மருத்துவம் செய்வதற்கும் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் அதிர்ச்சிகளைக் கண்டறிய எவ்வித பரிசோதனைகளும் உலகில் இல்லை. எந்த ஸ்கேனும், ரத்தப் பரிசோதனையும் அதிர்ச்சிகள் பற்றிய தகவல்களைக் கொடுக்காது என மிச்சிகன் யுனிவர்சிட்டியின் பேராசிரியர் ஸ்டீவன் ப்ராக்லியோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவசர சிகிச்சை நிபுணரும், பேராசிரியருமான ரேச்சல் ரஸ்ஸோ பேசுகையில், ''இந்தக் கருவி மூளையில் ஏற்படும் மற்ற பிரச்னைகளைப் போக்குவதற்கும் உபயோகப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரத்த அழுத்தம் இருக்கும் நோயாளிகளுக்கு இந்தக் கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.
இதற்கு முன்னதாக மூளையில் ஏற்படும் அதிர்ச்சிகளைக் கண்டறிய இன்ஃப்ரா ரெட் லாம்ப்ஸ் (infrared Lamps) மூலம் கண்டிபிடிக்கப்பட்ட கருவிகளில், சிசிஓவிலிருந்து சரியாக தகவல்கள் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: வில்லியம்சனுடன் நேரம் செலவிட்டதை வாழ்வில் மறக்கமுடியாது...!