28வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கித் தொடர் மலேசியாவின் இபோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில்இந்தியா, கனடாவுடன் மோதியது.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே சிறப்பாக விளையாடிய இந்திய அணி, முதல் பாதியில் மட்டும் நான்கு கோல் அடித்து மிரட்டியது. இந்திய வீரர் வருண் 12வது நிமிடத்தில் கோல் அடிக்க, நட்சத்திர வீரர் மந்தீப் சிங் 20, 27, 29 ஆகிய நிமிடங்களில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
பின்னர் நடைபெற்ற இரண்டாம் பாதியையும் இந்திய அணி விட்டு வைக்கவில்லை. கனடா அணி கோல் அடித்த அடுத்த சில நிமிடங்களிலேயே இந்திய அணியும் கோல் அடித்தது.
கனடா சார்பில் மார்க் பியர்சன் (35), ஃபின் பூத்ரோயிட்(50), ஜேம்ஸ் வாலஸ் (57) நிமிடங்களில் கோல் அடித்தனர். இந்திய அணி தரப்பில் இரண்டாம் பாதியில் அமித் ரோஹிதாஸ் (39), விவேக் பிரசாத் (55), நிலகன்ட ஷர்மா (58) நிமிடங்களில் கோல் அடித்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த தொடரில் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு டிரா என 10 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்தியா, போலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.