2020இல் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தயாராகும் வகையில், இந்திய மகளிர் அணி ஐந்து ஹாக்கி டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட மலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஹாக்கி டெஸ்ட் போட்டி கோலாலம்பூரில் நேற்று நடைபெற்றது.
இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. இதையடுத்து, ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா சரியாக பயன்படுத்தி முதல் கோல் அடித்தார். இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 38ஆவது நிமிடத்தில் இந்திய வீராங்கனை லால்ரேசியாமி அணியின் இரண்டாவது கோலை அடித்தார்.
ஆட்டத்தின் இறுதி கட்டமான 60ஆவது நிமிடத்திலும், இந்திய வீராங்கனை வந்தானா மீண்டும் கோல் அடித்ததால், இந்திய மகளிர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஹாக்கி டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.