இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணி - லீட்ச் யுனைடெட் அணியை எதிர்கொண்டது.
ஆட்டம் தொடங்கியது முதலே டோட்டன்ஹாம் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தது. இதில் ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திய ஹாரி கேன், அதனை கோலாக மாற்றி அணியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து ஆட்டத்தின் 43ஆவது நிமிடத்தில் சன் ஹங் மின் கோலடித்து டோட்டன்ஹாம் அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் டோட்டன்ஹாம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடிய டோட்டன்ஹாம் அணிக்கு ஆட்டத்தின் 50ஆவது நிமிடத்தில் டோபி ஆல்டர்வீல்ட் கோலடித்தார். இறுதிவரை போராடிய லீட்ஸ் யுனைடெட் அணி, எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி கோலடிக்க முடியவில்லை.
இதனால் ஆட்டநேர முடிவில் டோட்டன்ஹாம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் லீட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் டோட்டன்ஹாம் அணி 29 புள்ளிகளைப் பெற்று இபிஎல் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது.
இதையும் படிங்க: கங்குலியின் உடல்நிலை குறித்த அறிய நேரில் சென்ற மம்தா பானர்ஜி!