இங்கிலாந்தில் கிளப் அணிகளுக்கு இடையே நடத்தப்படும் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பலம் வாய்ந்த செல்சி அணியை எவர்டன் அணி எதிர்கொண்டது.
இப்போட்டி தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே எவர்டன் வீரர் ரிச்சர்லிசன் கோல் அடித்தார். இதன்பின் கோல் அடிக்க முயன்ற செல்சி அணி வீரர்கள் பந்தை அதிக நேரம் தங்கள் வசம் வைத்திருந்தனர். இருப்பினும் அவர்களால் எவர்டனின் வீரர்களின் டிபென்சிப் ஆட்டத்தைத் தாண்டி கோல் அடிக்க முடியாமல் போனது.
பின்னர் இரண்டாவது பாதி தொடங்கியதும் எவர்டன் வீரர் டோம்னிக் கால்வெர்ட் லெவின் கோல் அடிக்க அந்த அணி இரண்டு கோல்களுடன் முன்னிலை வகித்தது. இதற்கு பதிலடி தரும்படியாக செல்சி வீரர் மேட்டியோ கோவாசிக் கோல் அடித்தார். ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் டோம்னிக் மற்றுமொரு கோல் அடிக்க எவர்டன் அணி 3-1 என்ற கோல் கணக்கில் செல்சியை வீழ்த்தியது.
இந்தப் போட்டிக்குப்பின் செல்சி அணி 29 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், எவர்டன் அணி 17 புள்ளிகளுடன் 15ஆவது இடத்திலும் உள்ளன.