சீனாவுக்கு அடுத்து கொரோனா வைரஸால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் இத்தாலி இரண்டாவது இடத்தில் உள்ளது. இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 822 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸால் கால்பந்து, டென்னிஸ், ரக்பி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. குறிப்பாக, இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டிகளும், ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறாது என அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,யுவென்டஸ் அணியின் தடுப்பாட்ட வீரர் (சென்டர் பேக்) டேனியல் ருகானிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக, யுவென்டஸ் கால்பந்து அணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால், கால்பந்து ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.
25 வயதான டேனியல் ருகானையும், அவரை தொடர்பு கொண்டவர்களையும் தனிமைப்படுத்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதனிடையே, உலக மக்களிடையே பெரும் பீதியைக் கிளப்பியுள்ள இந்த கொரோனா வைரஸ், ஒரு பெருந்தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கால்பந்து வீரர் ஒருவருக்கு முதல் முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கவனத்துக்குரியது.
இதையும் படிங்க: கொரோனா எதிரொலி: ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை கோரி வழக்கு