2019ஆம் ஆண்டிற்கான ஃபிபா மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் பிரான்ஸில் நடைபெற்று வந்தது. இதில், மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன. குரூப், காலிறுதிச்சுற்றை தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதிச் சுற்றுக்கு நான்கு அணிகள் தகுதி பெற்றன. அதன்படி நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் நடப்பு சாம்யினான அமெரிக்கா, இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் கால் வைத்தது.
அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில், ஸ்வீடனை வீழ்த்திய நெதர்லாந்து அணியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில் நேற்று லயன் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியின் முதல் பாதி வரை அமெரிக்க வீராங்கனைகளில் கோல் முயற்சியை நெதர்லாந்து வீராங்கனைகள் சிறப்பான தடுப்பாட்டத்தால் முறியடித்தனர்.
முதல் பாதியில் இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்காமல் இருந்தனர். இருப்பினும் இரண்டாவது பாதியின் 61ஆவது நிமிடத்தில் கோல் அடிக்கும் முயற்சியில் நெதர்லாந்து தடுப்பு வீராங்கனை ஸ்டெப்பானி வேன் டெர் கிராட், அமெரிக்க வீராங்கனை அலெக்ஸ் மார்கன் மீது மோதியதால், அமெரிக்காவிற்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அமெரிக்க வீராங்கனை மெகன் ரேபினோ எளிதாக கோல் அடித்தார். அதைத் தொடர்ந்து 69ஆவது நிமிடத்தில் மற்றொரு அமெரிக்க வீராங்கனை ரோஸ் லேவெல்லே கோல் அடித்து அசத்தினார். மேற்கொண்டு இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் இறுதியில் அமெரிக்க அணி 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
இதன்மூலம் அமெரிக்க மகளிர் அணி, சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ளது. அமெரிக்க அணி இதுவரை 4ஆவது முறையாக (1991, 1999, 2015, 2019) சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.