பெங்களூரு : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
லீக் சுற்று ஆட்டங்கள் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க அணிகள் போராடி வருகின்றன. இதுவரை இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மட்டும் அரைஇறுதிக்கு தகுதி பெற்று இருந்த நிலையில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3வது அணியாக ஆஸ்திரேலியாவும் அரைஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
அரைஇறுதி சுற்றுக்குள் நுழையும் 4வது அணியை தேர்வு செய்யும் ஆட்டமாக இன்று (நவ. 9) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் நியூசிலாந்து, இலங்கை அணிகள் இடையிலான ஆட்டம் காணப்படுகிறது. இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் நிலையில், புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தை பிடிக்கும்.
அதேநேரம் இலங்கை அணியை பெரிய ரன் அல்லது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணியால் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இலங்கை அணியின் இன்னிங்சை பதும் நிசன்கா, குசல் பெரரா ஆகியோர் தொடங்கினர். ஆரம்பமே இலங்கை அணிக்கு அதிர்ச்சிகரமாக அமைந்தது. பதும் நிசன்கா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் குசல் மெண்டிஸ் 6 ரன்களில் நடையை கட்டினார்.
அடுத்தடுத்து களமிறங்கிய சதீர விக்ரமா 1 ரன், சரித் அசலன்கா 8 ரன் என அடுத்தடுத்து ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்தனர். இதனிடையே அரை சதம் கடந்து நிலைத்து நின்று விளையாடிக் கொண்டு இருந்த மற்றொரு தொடக்க வீரர் குசல் பெரரா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தர். அடுத்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் பெரிய அளவில் சோப்பிக்கவில்லை.
16 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தனஞ்செய டி சில்வா 19 ரன், சமைக்கா கருணரத்னே 6 ரன், துஸ்மந்தா சமீரா 1 ரன் ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 46 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டும், லாக்கி பெர்குசன், மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் டிம் சவுதி 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 172 ரன்கள் இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடுகிறது.
இதையும் படிங்க : SA vs AFG: அரையிறுதிக்கு முன்னேறுமா ஆப்கானிஸ்தான்..? தென் ஆப்ரிக்காவுடன் நாளை பலப்பரீட்சை!