லக்னோ: ஐசிசி நடத்தும் 13வது ஒருநாள் உலகக் கோப்பை தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்தொடரின் 29வது லீக் ஆட்டம் இன்று (அக்.29) லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டியின் மூலம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் அந்த அணியை 100வது முறையாக வழிநடத்துகிறார். இவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 39 போட்டிகளில் அணியை வழிநடத்தியுள்ளார். அதில் 29 வெற்றிகளும், 9 தோல்விகளையும் சந்தித்துள்ளார்.
1 போட்டிக்கு எவ்வித முடிவும் இல்லை. அதேபோல் 51 டி20 போட்டிகளிலும், 9 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். இவரது வெற்றியின் சராசரி, ஒருநாள் போட்டிகளில் 76.31 ஆகவும், டி20 போட்டிகளில் 76.47 ஆகவும், டெஸ்ட் போட்டிகளில் 71.42 ஆகவும் உள்ளது.
நடப்பாண்டு உலகக் கோப்பையில், இவரது தலைமையின் கீழ் இந்திய அணி, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து என விளையாடிய 5 போட்டிகளிலுமே வெற்றியைப் பெற்று புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேநேரம் இன்று (அக்.29) எதிர்கொள்ளும் இங்கிலாந்து அணி, நடப்பாண்டு உலகக் கோப்பையில் விளையாடிய 5 போட்டிகளில் 1 வெற்றியை மட்டுமே பெற்று 10வது இடத்தில் உள்ளது.
மேலும், ரோகித் சர்மா பேட்டிங்கிலும் இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் எவ்வித ரன்களும் இன்றி டக் அவுட் ஆனாலும், அடுத்த 4 போட்டிகளில் தனக்கு உண்டான பாணியில் அதிரடியாக விளையாடி தலா ஒரு சதம் மற்றும் அரைசதம் உள்பட 311 ரன்கள் எடுத்து, நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் என்ற பட்டியலில் 8வது இடத்தில் உள்ளார்.
2007 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற போதும், 2013 சாம்பியன் டிராபியை வென்றபோதும், ரோகித் சர்மா அணியில் ஒர் அங்கமாக இருந்தார். குறிப்பாக, 2013 சாம்பியன் டிராபியை வென்றதற்கு ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: BAN VS NED: நெதர்லாந்து அபார வெற்றி! வங்கதேசத்தை சுருட்டியது!