அகமதாபாத் : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக வெற்றிகரமாக நிறைவு செய்த நிலையில், எந்த உலக கோப்பை தொடரிலும் இல்லாத பல்வேறு சிறப்பம்சங்கள் நடப்பு சீசனில் அரங்கேறி உள்ளன.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் உலக கோப்பை கிரிக்கெட்டில் 5வது வரிசையில் களமிறங்கி 400 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்து உள்ளார். இதற்கு முன் இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அந்த வரிசையில் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது அவரை பின்னுக்குத் தள்ளிவிட்டு கே.எல்.ராகுல் அந்த சாதனையை படைத்து உள்ளார்.
நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 10 இன்னிங்ஸ்களில் களமிறங்கி உள்ள கே.எல். ராகுல் ஒட்டுமொத்தமாக 452 ரன்கள் எடுத்து உள்ளார். இதற்கு முன் ராகுல் டிராவிட் 9 ஆட்டங்களில் விளையாடி 355 ரன் எடுத்து முதலிடத்தில் இருந்தார். தற்போது அவரை பின்னுக்குத் தள்ளி கே.எல். ராகுல் முதலிடம் பிடித்து உள்ளார்.
31 வயதான கே.எல்.ராகுல் நடப்பு சீசனில் 2 அரைசதம், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 97 ரன் நாட் அவுட் என 5வது வரிசையில் களமிறங்கி ரன் குவித்து உள்ளார். அதேபோல் ஒரு உலக கோப்பை தொடரில் அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த சாதனைக்கும் கே.எல். ராகுல் சொந்தக்காரராகி உள்ளார்.
நடப்பு சீசனை அவர் 17 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து உள்ளார். இதற்கு முன் கடந்த 2015ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் முன்னாள் கேப்டன் டோனி 15 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ததே சாதனையாக இருந்தது. தற்போதை அந்த சாதனையை கே.எல்.ராகுல் முறியடித்து உள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் கே.எல்.ராகுல் இதுவரை 72 ஆட்டங்களில் விளையாடி 2 ஆயிரத்து 743 ரன்கள் குவித்து உள்ளார். இதில் 7 சதங்களும் அடங்கும். 5வது வீரராக மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கி மட்டும் ஆயிரத்து 259 ரன்களை கே.எல்.ராகுல் குவித்து உள்ளார்.
அதேநேரம் மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கி ஒரு முறை கூட டக் அவுட் முறையில் அவுட்டானது கிடையாது என்ற சாதனையையும் கே.எல்.ராகுல் தன்னகத்தே வைத்து உள்ளார்.
இதையும் படிங்க : "பாலஸ்தீனத்தின் மீது குண்டு போட வேண்டாம்!" மைதானத்திற்குள் நுழைந்த இளைஞர்!