ஹைதராபாத்: ஐபிஎல் 2023 போட்டிகள், கடந்த மே 31அன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐபிஎல் 2023இன் 25வது லீக் ஆட்டத்தில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இண்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்று வரும் ஆட்டத்தில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் களம் இறங்கியது.
இதில் மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெடுகள் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை அணியில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் அரைசதம் கடந்து, 64 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதேநேரம், இஷான் கிஷான் 38, திலக் வர்மா 37, ரோகித் ஷர்மா 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதேபோல், டிம் டேவிட் 16 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 7 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அதேநேரம், ஹைதராபாத் அணியின் மார்கோ ஜான்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும், டி.நடராஜன் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து 193 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 48 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதேநேரம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாரி புரூக் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் தற்போது வரை 17 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து போராடி வருகிறது.
எய்டன் மார்க்ரமை கேப்டனாகக் கொண்டு ஆட்டத்தை தொடங்கி உள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் 11இல், ஹெயின்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், ஹாரி புரூக், ராஹுல் திரிபாதி, அபிஷேக் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், மயங்க் மார்கண்டே, புவனேஸ்வர் குமார் மற்றும் டி.நடராஜன் ஆகியோர் களம் கண்டுள்ளனர்.
அதேபோல் ரோகித் ஷர்மாவை கேப்டனாக கொண்டு களம் கண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் 11இல், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹல் வதேரா, கேமரூன் கிரீன், அர்ஜுன் டெண்டுல்கர், ஹிர்திக் ஷோகீன், பியூஷ் சாவ்லா மற்றும் ஜாசன் பெஹ்ரன்டோர்ஃப் ஆகியோர் விளையாடுகின்றனர்.
மேலும், இந்த ஆட்டத்தில் நிதின் மேனன் மற்றும் வினோத் சேஷான் ஆகிய இருவரும் கள நடுவராகவும், விரேந்தர் குமார் ஷர்மா 3வது நடுவராகவும் உள்ளனர். தற்போது வரை மும்பை இந்தியன்ஸ் அணி, 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வி என 4 புள்ளிகள் உடன் புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. அதேநேரம், 2 வெற்றி, 2 தோல்வி என 4 போட்டிகளில் விளையாடி உள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: MI vs SRH: சவால் விடும் சன்ரைசர்ஸ்! வெற்றிப் பாதையில் பயணிக்குமா மும்பை?