புனே: ஐபிஎல் 15ஆவது சீசன் கடந்த சனிக்கிழமை (மார்ச் 26) அன்று மும்பையில் தொடங்கியது. நான்கு லீக் ஆட்டங்கள் நிறைவடைந்து தொடர் சூடுப்பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஐந்தாவது லீக் ஆட்டம் புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று (மார்ச் 29) நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, பவர்பிளேயில் 58 ரன்களை குவித்தது. குறிப்பாக, உம்ரான், வாஷிங்டன் ஆகியோர் வீசிய இரண்டு ஓவர்களில் மட்டும் 39 ரன்கள் எடுக்கப்பட்டன.
பவர்பிளேவிற்கு அடுத்து, ஜெய்ஸ்வால் 20 (16) ரன்களில் ஷெப்பேர்ட்டிடமும், பட்லர் 35 (28) ரன்களில் உம்ரான் மாலிக்கிடமும் வீழ்ந்தனர். இதையடுத்து, மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் சாம்சன் - படிக்கல், மிடில் ஓவர்களில் பவுண்டரிகளை குவித்தனர்.
இந்த ஜோடி, 41 பந்துகளில் 73 ரன்களை குவிக்க ராஜஸ்தானின் ஸ்கோர் சட்டென உயர்ந்தது. இருப்பினும், உம்ரானின் அசுர வேகத்தில் படிக்கல் 41 (29) ரன்களிலும், புவனேஷ்வர் பந்துவீச்சில் அவசரப்பட்ட சாம்சன் 55 (27) ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். இதில், சாம்சன் 5 சிக்சர்கள், 3 பவுண்டரிகளை குவித்தது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு பின் வந்த ஹெட்மயர், ரியான் பராக் ஜோடியும் அசராமல் பவுண்டரிகளை பறக்கவிட்டன. கடைசி ஓவரில், நடராஜனின் ட்ரேட்மார்க் யார்க்கரில் சிக்கிய ஹெட்மயர் 32 (13) ரன்களிலும், பராக் 12 (9) ஆட்டமிழந்தனர். இதன்மூலம், ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்களை குவித்தது. ஹைதராபாத் பந்துவீச்சு சார்பில் நடராஜன், உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
211 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத், சட சடவென விக்கெட்டுகளை தானம் அளித்தது. பவர்பிளே முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட அந்த அணி வெறும் 14 ரன்களையே எடுத்திருந்தது. அதில், திரிபாதி, பூரன் ஆகிய இருவரும் டக்-அவுட்டானது குறிப்பிடத்தக்கது.
பிரசித், போல்ட், சஹால் ஆகியோரின் அசத்தலான பந்துவீச்சால் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து மிகவும் தடுமாறியது. கடைசி கட்டத்தில் வாஷிங்டன், ஷெப்பேர்டு ஆகியோரின் சிறிய கேமீயோவால் அந்த அணியின் ஸ்கோர் மூன்று இலக்கத்திற்கு வந்தது. மார்க்ரம் நிலையான ஆட்டத்தை வெளியப்படுத்த, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. ராஜஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.