அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணியும் இதுவரை அடுத்த சுற்றான பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் இருந்தது. டெல்லி அணி மட்டும் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பில் இருந்து வெளியேறி உள்ளது.
இந்நிலையில் நேற்று அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 62ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மல்லுக்கட்டின. இந்த போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முதல் அணியாகும் முனைப்பில் குஜராத் அணியும், இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிடும் என்ற நிலையில் ஐதராபாத் அணியும் ஆடின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் விருத்திமான் சஹா களம் இறங்கினர். சஹா மூன்று பந்துகளை எதிர்கொண்டு ரன் எதுவும் இன்றி முதல் ஓவரிலேயே நடையைக் கட்டி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து களம் இறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் பொறுப்பான ஆட்டத்தை ஆடி மற்றொரு துவக்க ஆட்டக்காரரான சுப்மன் கில்லுக்கு தில் கொடுத்தார். இந்த ஜோடி துரித ரன் சேகரிப்பில் ஈடுபட்டதால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஆட்டத்தின் 14ஆவது ஓவரில் மார்கோ ஜான்சென் வீசிய பந்தில் நடராஜனிடம் கேட்ச் ஆகி 36 பந்துகளுக்கு 47 ரன் எடுத்த நிலையில் சாய் சுதர்சன் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து ஆட வந்த குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் 8 ரன் சேர்த்த நிலையில் புவனேஸ்வர்குமார் வீசிய பந்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து களம் இறங்கிய வீரர்கள் யாரும் நிலைத்து நிற்காமல் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர். இந்நிலையில் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடிய துவக்க ஆட்டக்காரர் சும்பன் கில் 58 பந்துகளில் 101 ரன் சேர்த்த நிலையில் அவரும் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்ததாக, கடந்த ஆட்டத்தின் ஹீரோவான ரஷித் கான் களம் கண்டார். ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசிய புவனேஸ்வர்குமார் பந்து வீச்சில், ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி என மூன்று வீரர்களும் டக் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன் சேர்த்தது.
189 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அன்மோல்பிரீத் சிங், அபிஷேக் சர்மா களம் இறங்கினர். குஜராத் அணியின் பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.
அடுத்து ஆட வந்த ராகுல் திரிபாதியும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். அடுத்து களம் இறங்கிய ஐதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பெரிய அளவில் சோபிக்காமல் 10 ரன்னில் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்து கொண்டிருக்க மறுபுறம் ஹென்ரிச் கிளாசென் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதத்தைக் கடந்தார்.
பின்னர் களம் இறங்கிய வீரர்களும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். அணிக்கு ஒற்றை ஆளாகப் போராடிய ஹென்ரிச் கிளாசெனும் 44 பந்துகளில் 64 ரன் சேர்த்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் புவனேஷ்வர்குமாரும், மயங்க் மார்கண்டேவும் 27, 18 ரன் வீதம் சேர்த்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் குஜராத் அணி 34 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது. மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்த குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.