பெங்களூரு: கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் 17வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. சமீபத்தில் இதற்கான டிரேட் முறை நடந்து முடிந்தது. மேலும், வரும் டிசம்பர் 19ஆம் தேதி 2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
ஐபிஎல் 2024 தொடருக்கான தற்போதைய ஊடக உரிமம் 2022ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டிற்கு 6.2 பில்லியன் அமெரிக்க டாலராக அதாவது இந்திய மதிப்பில் கிட்டதட்ட 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இது சர்வதேச கால்பந்து லீக்கிற்கு அடுத்த படியாக உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் ஊடக உரிமம் அடுத்த 20 ஆண்டுகளில் 50 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என இந்தியன் பிரிமியர் லீக்கின் தலைவர் அருண் துமால் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது; "கடந்த 15 ஆண்டுகளை ஓப்பிடுகையில், வர இருக்கும் இருபது ஆண்டுகளில் கிட்டதட்ட 2043ஆம் ஆண்டில் ஐபிஎல் ஊடக உரிமமானது 50 பில்லியன் அமெரிக்க டாலரை நெருங்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போது ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டும் ஒரு அங்கமாக மாறி வருகிறது.
அதேபோல் டபிள்யூபிஎல் (WPL) பெண்களுக்கான கிரிக்கெட்டில் வேறு மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும், ஐபிஎல் தொடரானது உலகளவில் அதிக பார்வையாளர்களை கொண்டதாகும். கலாசாரம், பேசப்படும் பல்வேறு மொழிகளின் அடிப்படையில் நாம் வேறுபட்ட நாடாக உள்ளோம். ஆனால் ஐபிஎல் தளத்தை கொண்டு இந்தியாவை உலகிற்கு நன்றாக காட்ட முடியும்" என்றார்.
இதையும் படிங்க: உலகக் கோப்பையின் மீது கால் வைத்து போஸ் கொடுத்த விவகாரம் - மிட்செல் மார்ஷ் விளக்கம்!