ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று(செப்.25) நடைபெற்ற ஏழாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி, இந்த சீசனின் இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்தது.
போட்டிக்குப் பின்னர் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிளமிங், “ஆமாம், கடந்த போட்டிகளில் சிஎஸ்கே அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் சரியாக செயல்படாதது கவலைக்குரிய விஷயம் தான்.
ஏனெனில் கடந்த 12 சீசன்களாக சென்னை அணி சுழற்பந்துவீச்சாளர்களை நம்பியே இருந்தது. ஆனால் இந்த சீசனில் நாங்கள் எதிர்பார்த்த பலன் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆதலால் நாங்கள் வேறு யுக்திகளைத் தான் கையாளவேண்டும். அதேசமயம், தற்போது நடைபெற்ற போட்டிகளில் ஜடேஜா மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் அதிக ரன்களை விட்டுக்கொடுத்துள்ளனர்.
இதனால் அவர்கள் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கை ஏமாற்றமளித்துள்ளது. மேலும் தற்போது நாங்கள் விளையாடும் மைதானமும், தட்பவெப்ப நிலையும் முழுமையாக எங்களை பாதித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடுவது மிகவும் கடினம் என தெரியும். இருப்பினும் நாங்கள் இனி வரும் போட்டிகளில் வெற்றியை பெறுவோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: சென்னை vs டெல்லி - ஆட்டத்தை மாற்றிய தருணங்கள்