2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 30ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி-ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி மூன்று வெற்றி,மூன்று தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. அதேபோல் டெல்லி அணி 7 போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றி, மூன்றில் தோல்வி என 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் தொடக்க வீரர்களான வார்னர்-பெயர்ஸ்டோவ் இணையை நம்பியே ஆடி வருகிறது. தொடக்க வீரர்களை விரைவில் ஆட்டமிழக்க செய்தால் நடுவரிசை வீரர்களான மனீஷ் பாண்டே, யூசுப் பதான், தீபக் ஹூடா ஆகியோர் திணறி வருகின்றனர். இதனால் வார்னர் - பெயர்ஸ்டோவ் மீதான அழுத்தம் அதிகமாகியுள்ளது. இதனை டெல்லி அணி பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தி இருவரையும் விக்கெட்டுகளை எடுத்தால் டெல்லி அணியின் ஆதிக்கம் இந்த போட்டியிலும் தொடரும்.
மேலும் இந்த போட்டியில் முகமது நபிக்கு பதிலாக கேப்டன் வில்லியன்சன் இந்தப் போட்டியில் களமிறங்கினால் நடுவரிசை பலம் கூடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அதேபோல் பந்துவீச்சில் ரஷீத் கான், புவி வழக்கம்போல் சிறப்பாக செயல்படக்கூடும். சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல் ஒத்துழைப்பு வழங்கினால் டெல்லி அணி பேட்ஸ்மேன்கள் மீது ஆதிக்கம் செலுத்த மிகப்பெரிய வாய்ப்புகள் ஏற்படும்.
டெல்லி அணியில் தவான் கடந்தப் போட்டியில் வெளிப்படுத்திய பேட்டிங்கை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரித்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், இங்ரம் ஆகியோர் ஃபார்மிற்கு வந்துள்ளதால் டெல்லி அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பந்துவீச்சில் சந்தீப் லெமிச்சானெ, ரபாடா, இஷாந்த் ஷர்மா, அக்ஸர் படேல் ஆகியோர் நன்றாக வீசி வருவதை தொடர்வார்கள் என எதிர்பார்க்கலாம்.