கொல்கத்தா : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசன், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
நடப்பு சீசனில் விளையாடிய 7 ஆட்டங்களிலும் தோல்வியே சந்திக்காத இந்திய அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய அணியில் அனைத்து வீரர்களும் முழு உடற்தகுதியுடன் உள்ளனர். தொடக்க வீரர்களை பொறுத்தவரை ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளார்.
அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான விராட்கோலி, கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி ரன் குவித்து வருகின்றனர். கடந்த இலங்கை அணிக்கு எதிரான ஆடத்தில் ரோகித் சர்மா சொதப்பினாலும், அவருக்கு பதிலாக மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் உள்ளிட்டோர் அதிரடியாக விளையாடி, இலங்கைக்கு இமாலய ஸ்கோரை வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்ரேயஸ் ஐயர், கடந்த ஆட்டத்தில் பார்முக்கு வந்து உள்ளார். ஷாட் பந்துகளில் அவர் ஆட்டமிழப்பதாக தொடர்ந்து விமர்சனம் எழுந்து வந்தாலும், ஆட்ட நுணக்கங்களை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். பந்துவீச்சை பொறுத்தவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர்க்ள் முழு பார்மில் உள்ளனர்.
முகமது ஷமி, முகமது சிராஜ். ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் நல்ல உடல்தகுதியுடன் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் நேர்த்தியாக பந்துவீசிய முகமது ஷமி வெறும் 18 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளி சாதனை படைத்தார். இலங்கை அணிக்கு எதிரான ஆட்டம் என்றாலே குஷியாகிவிடும் முகமது சீரஜ், கடந்த ஆசிய கோப்பை ஆட்டத்திற்கு பிறகு, உலக கோப்பையிலும் இலங்கை அணியின் விக்கெட்டுகளை கபளீகரம் செய்து அசத்தி உள்ளார்.
சுழற்பந்துவீச்சை பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா, குல்திப் யாதவ் ஆகியோ நல்ல நிலையில் உள்ளனர். அவர்களிடம் இருந்து சிறப்பான விளையாட்டை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இன்றைய ஆட்டத்தில் இருவரும் பெரிய அளவில் கோலோச்சுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு உலக கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா விலகி இருப்பது சற்று பின்னடைவு தான்.
அவருக்கு பதிலாக துணை கேப்டன் பொறுப்பை கே.எல். ராகுல் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக அணிக்கு பிரசித் கிருஷ்ணா அழைக்கப்பட்டு உள்ளார். எஞ்சிய இரு லீக் ஆட்டங்களில் ஒன்றிலாவது அவர் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம் தென் ஆப்பிரிக்க அணியை பார்க்கையில் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் அந்த அணி சிறந்து காணப்படுகிறது. கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை தொடக்க வீரர் குயிண்டன் டி காக் பலமாக காணப்படுகிறார்.
நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்து கடும் நெருக்கடி அளிக்கக் கூடிய வீரர்களில் ஒருவராக காணப்படுகிறார். டி காக்கை விரைவாக வெளியேற்றும் பட்சத்தில் மற்றவர்களை எளிதாக இந்திய பந்துவீச்சாளர்கள் கையாள்வார்கள் எனக் கருதப்படுகிறது.
அதேபோல் ரஸ்ஸி வான் டர் துஸ்சென், டேவிட் மில்லர் ஆகியோரும் தென் ஆப்பிரிக்க அணியில் அதிக கவனம் பெறும் வீரர்கள் பட்டியலில் உள்ளனர். இவர்களை கட்டுப்படுத்தும் பட்சத்தில் குறைந்த அளவிலான ஸ்கோரிலேயே தென் ஆப்பிரிக்க அணியை இந்திய வீரர்கள் மடக்கி விடலாம்.
பந்துவீச்சை பொறுத்தவரை கேசவ் மகராஜ், மார்கோ ஜான்சன் உள்ளிட்டோர் தென் ஆப்பிரிக்க அணியில் நல்ல பார்மில் உள்ளனர். இரு அணிகளும் அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட்ட நிலையில், தங்களுக்கு யார் பலசாலி என நிரூபிக்க போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் :
இந்தியா : ரோகித் ஷர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.
தென் ஆப்பிரிக்கா : குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டர் துஸ்சென், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி.
இதையும் படிங்க : சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ரச்சின் ரவீந்திரா!