அகமதாபாத்: 13வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடவுள்ளன. இன்று (நவ.19) அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இந்திய நேரப்படி 2 மணிக்கு இப்போட்டியானது தொடங்கப்படவுள்ளது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் அனைத்து பேட்ஸ்மேன்களும் தங்கள் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். ரன் மிஷன் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா, ஸ்ரேயாஷ் ஐயர், சுப்மன் கில் உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் வெற்றிக்கு ஆணிவேராக இருந்து வருகின்றனர். குறிப்பாக, இந்த தொடரில் மட்டும் விராட் கோலி 3 சதங்கள் விளாசி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை முறியடித்தார்.
இந்நிலையில், இன்று நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சதம் அடிப்பது யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், இதுவரை நடைபெற்ற 12 உலகக் கோப்பை இறுதி போட்டிகளில் 6 சதங்களை வீரர்கள் விளாசியுள்ளனர்.
கிளைவ் லாய்ட்: முதல் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 1975ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிளைவ் லாயிட் 85 பந்துகளில் 102 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுதான் உலகக் கோப்பை போட்டியில் அடிக்கப்பட்ட முதல் சதமாகும்.
சர் விவ் ரிச்சர்ட்ஸ்: 1979ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சர் விவ் ரிச்சர்ட்ஸ் 138 ரன்கள் விளாசினார். இதன் மூலம், 2வது முறையாக வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த டி சில்வா: 1996ஆம் ஆண்டு நடைபெற்ற 6வது உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இலங்கை அணியின் வீரர் அரவிந்த டி சில்வா ஆட்டமிழக்காமல், 107 ரன்கள் குவித்து மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடினார். இதன் மூலம் இலங்கை அணி முதல் முறையாக உலகக் கோப்பையை தட்டிச் சென்றது.
ரிக்கி பாண்டிங்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 2003ஆம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால், ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் அடித்த சதம் மூலம் இந்தியாவின் கனவு நனவாகாமல் போனது. அந்த போட்டியில் 140 ரன்களை குவித்தார், ரிக்கி பாண்டிங்.
ஆடம் கில்கிறிஸ்ட்: 2007ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் 149 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
மஹேல ஜெயவர்த்தனே: 2011ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் மஹேல ஜெயவர்த்தனே 103 ரன்கள் விளாசினார். இருப்பினும், இந்தியா கோப்பையை வென்றது.
இதையும் படிங்க: India Vs Australia : உலக கோப்பை யாருக்கு? இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதல்!