பெங்களூரு: நெதர்லாந்து அணிக்கு எதிரரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், “நாங்கள் இந்த உலகக் கோப்பையை தொடங்கும்போது ஒவ்வொரு போட்டியாகப் பார்க்க வேண்டும். அதில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என நினைத்தோம். இது நீண்ட தொடர் என்பதால், அடுத்தடுத்து நடக்கவிருப்பதைப் பற்றி சிந்திக்கவில்லை.
மேலும் இந்தியாவில் உள்ள வெவ்வேறு இடங்களுக்கு தகுந்தாற்போல் எங்களை மாற்றிக் கொள்ள வேண்டி இருந்தது. இதனால் முதல் போட்டி தொடங்கியதில் இருந்து தற்போது வரை செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை அளித்து, அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இது அணிக்கு நல்ல அறிகுறி.
இங்குள்ள நிலைமைகள் அனைத்தும் எங்களுக்கு தெரிந்ததுதான். ஆனால், ஒவ்வொரு அணிக்கு தகுந்தது போல அதனை மாற்றி விளையாடுவது சவாலான ஒன்று. இதை அணி வீரர்கள் சிறப்பாக செயல்படுத்தியுள்ளார்கள் என்பது மகிழ்ச்சி.
நடப்பு உலகக் கோப்பை தொடரில், முதல் 4 போட்டிகளில் சேஸிங் செய்தோம். அடுத்த 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக முதலில் பேட்டிங் செய்தோம். மற்றவற்றை எல்லாம் பந்து வீச்சாளர்கள் பார்த்து கொண்டார்கள். அதேபோல் அணியின் சூழ்நிலைகளை கலகலப்பாக வைத்துக் கொள்ள விரும்பினோம். இது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வழிவகுக்கும். தற்போது வரை அதை செயல்படுத்தி வருகிறோம்.
இன்றைய போட்டியில் 9 பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தினோம், காரணம், வேகப்பந்து வீச்சாளர்கள் வைடு யார்கர்களை வீச வேண்டி இருந்தது. எனவே, அதற்கு பதிலாக நாங்கள் மற்ற பந்து வீச்சாளர்களை பயன்படுத்தினோம்” என தெரிவித்தார்.
போட்டி சுருக்கம்: 13வது ஐசிசி உலகக் கோப்பை தொடரின் 45வது லீக் போட்டியில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதின. பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 128 ரன்களும், கே எல் ராகுல் 102 ரன்களும் விளாசினர். பின்னர் 411 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி, 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 160 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: ஒரே வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் பட்டியலில் ரோகித் ஷா்மா முதலிடம்!