அலிகார்: ஐசிசி நடத்திய உலகக் கோப்பை தொடர் கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி நிறைவு பெற்றது. இத்தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் முன்னேறின. இதில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பலர் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதில் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரான மிட்செல் மார்ஷ் கோப்பையின் மீது தனது காலை வைத்தவாறு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த புகைப்படத்தை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டு இருந்தார். இதனை கண்ட சிலர் மிட்செல் மார்ஷின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவர் கோப்பை மேல் கால் வைத்தவாறு எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளம் எங்கும் வைரலாகி சர்ச்சைக்கு உள்ளானது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த பண்டிட் கேசவ் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் கோப்பையின் மீது கால் வைத்தது, இந்திய ரசிகர்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளதாக கூறி அவர் மீது புகார் அளித்து உள்ளார். இதன் அடிப்படையில் உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் மிட்செல் மார்ஷ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், புகார் மனுவின் பிரதியை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்துள்ளார். அதேபோல் அவரை இந்திய மண்ணில் விளையாட தடை விதிக்குமாறும் அந்த மனுவில் வேண்டுகொள் விடுத்துள்ளார். மேலும், மிட்செல் மார்ஷின் இந்த செயலுக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வருத்தம் தெரிவித்துள்ளார்.
அவர், "உலகக் கோப்பையின் மீது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் கால்கள் வைத்தது மனதை காயப்படுத்தியது. உலக அணிகள் அனைத்தும் வெல்ல நினைக்கும் கோப்பை, தங்களது தலைக்கு மேல் தூக்கி கொண்டாட நினைக்கும் கோப்பை மீது கால்களை வைத்தது மகிழ்ச்சியை தரவில்லை" என்றார்.
இதையும் படிங்க: "கேப்டனாக இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்ததில் மகிழ்ச்சி" - சூர்யகுமார் யாதவ்!