தர்மசாலா : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (அக். 10) இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, வங்காளதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இன்று தர்மசாலாவில் நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதேபோல் வங்காளதேச அணியும் தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.
முதல் ஆட்டத்தில் கண்ட வெற்றியின் காரணமாக இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்திவிடலாம் என வங்காளதேசம் எளிதில் எடுத்துக் கொள்ளக் கூடாது. இங்கிலாந்து அணியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இன்னும் காயத்தில் இருந்து பூரண குணமடையவில்லை என கூறப்படுகிறது.
அதனால் இன்றைய ஆட்டத்திலும் அவர் களமிறங்குவது சந்தேகம் தான். அவருக்கு பதிலாக ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டத்திலும் கேப்டனாக நீடிப்பார் எனத் தெரிகிறது. லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், மொயின் அலி உள்ளிட்டோர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அது வங்காளதேசத்திற்கு கடும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசம் அணியிலும் ஷகிப் அல் ஹசன் உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். விக்கெட் வீழ்த்துவது மற்றும் ரன் குவிப்பது என இரண்டிலும் ஷகிப் அல் ஹசன் நல்ல நிலையில் உள்ளார். தர்மசாலா மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடியது என்பதால் இன்றைய ஆட்டத்தில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வங்கதேசம் திட்டமிட்டு உள்ளது.
அதன்படி நசும் அகமது அல்லது மஹதி ஹசன் ஆகியோரின் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இங்கிலாந்து அணி தனது முதல் வெற்றியை பெறவும், அதேநேரம் இரண்டாவது வெற்றியை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர வங்கதேசமும் முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் :
இங்கிலாந்து : ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், மொயின் அலி, ஜோஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்.
வங்கதேசம் : தன்சித் தமீம், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், நஸ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா அல்லது நசும் அகமது, தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்.
இதையும் படிங்க : "நடப்பாண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும்" - ஜடேஜாவின் சகோதரி நயனபா ஜடேஜா!