லக்னோ: 13வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்நிலையில், இத்தொடரின் 29வது லீக் ஆட்டம் லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர்.
தொடக்கம் முதலே பந்து வீச்சில் மிரட்டிய இங்கிலாந்து அணி, முதல் விக்கெட்டாக சுப்மன் கில்லை வீழ்த்தியது. அவர் 9 ரன்களுக்கு வெளியேறினார். அதன்பின் விராட் கோலி டக் அவுட், ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ரோகித் சர்மாவுடன் - கே.எல்.ராகுல் கூட்டணி சேர்த்து ரன்கள் சேர்க்க தொடங்கினார்.
பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்த ரோகித் சர்மா அரைசதம் விளாசினார். மறுபக்கம் கே.எல். ராகுல் நிதானமாக விளையாட போட்டியின் 31வது ஓவரில் டேவிட் வில்லியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ராகுல் 58 பந்துகளில் 39 ரன்கள் அடித்தார். ஒருபக்கம் விக்கெட்கள் வீழ்ந்தாலும், சிறப்பாக விளையாடி சதத்தை நெருங்கிய ரோகித் சர்மா 87 ரன்களில், லிவிங்ஸ்டேனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இவரை தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 49 ரன்கள் எடுத்து இந்திய அணி 200 ரன்கள் கடக்க உதவினார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டேவிட் வில்லி 3 விக்கெட்களையும், அடில் ரஷித் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணி 230 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கியது. இந்திய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து வீரர்கள் அவசரகதியாக ஷாட்டுகளை அடித்து அவுட்டாகி வெளியேறினர். தொடக்க வீரர்கள் டேவிட் மலான் 16 ரன், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் டக் அவுட்டாகி வெளியேறினர்.
அடுத்தடுத்து களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் இந்திய வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் டக் அவுட், மற்றொரு தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் 14 ரன், கேப்டன் ஜாஸ் பட்லர் 10 ரன், மொயின் அலி 15 ரன், கிறிஸ் வோக்ஸ் 10 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
லியாம் லிவிங்ஸ்டோன் (27 ரன்) மட்டும் சிறிது நேரம் தாக்குப் பிடித்தார். 34 புள்ளி 5 ஓவர்கள் முடிவில் 129 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜஸ்பிரீத் பும்ரா 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும் அள்ளினர். குல்திப் யாதவ் 2 விகெட்டும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. அதேநேரம், இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
இதையும் படிங்க: IND vs ENG LIVE Score: 8 விக்கெட்களை இழந்து திணறும் இந்திய.. பந்து வீச்சில் மிரட்டும் இங்கிலாந்து பவுலர்கள்!