கொல்கத்தா: ஐசிசி உலக கோப்பை தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நெதர்லாந்து - வங்கதேசம் இடையேயான 28வது லீக் ஆட்டம் இன்று கொல்காத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களாக விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓ'டவுட் களம் இறங்கினர். ஆனால் இவ்விரு வீரர்களும், வங்கதேச அணியின் பந்து வீச்சை எதிர்கொள்வதில் சிரமப்பட்டனர். இதனால் முதலில் விக்ரம்ஜித் சிங் 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து மற்றொறு தொடக்க வீரரான மேக்ஸ் ஓ'டவுட் 0, கொலின் அக்கர்மேன் 15 என அடுத்தடுத்து வெளியேறினர்.
பின்னர் வெஸ்லி பாரேசி மற்றும் அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸின் கூட்டணி இணைந்தது. இந்த கூட்டணி நிதானமாக அணியின் ரன்களை உயர்த்தியது. ஆனால் சிறுதி நேரத்தில் இந்த கூட்டணியை வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஸூர் பிரித்தார். வெஸ்லி பாரேசி 41 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ஸ்காட் எட்வர்ட்ஸ் 68 ரன்களிலும், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 35, பாஸ் டி லீடே 17 ரன்களிலும் அவுட் ஆகினர்.
50 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 229 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமாக ஷோரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து வங்கதேசம் அணி 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது.
வங்கதேசம் அணிக்கு எதிர்பார்த்தது போல் ஆட்டம் சரியாக அமையவில்லை. அந்த அணி வீரர்கள் நெதர்லாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ் 3 ரன், தன்சித் ஹசன் 15 ரன், நஜ்முல் ஹுசைன் சாண்டோ 9 ரன், கேப்டன் ஷகிப் அல் ஹசன் 5 ரன், விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் 1 ரன் என அடுத்தடுத்து விக்கெட் அணிவகுப்பு நடத்தினர்.
70 ரன்களுக்குள் வங்கதேசம் அணி 6 விக்கெட்டுகளை இழந்து தட்டுத் தடுமாறியது. இதனிடையே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மெஹிதி ஹசன் (35 ரன்) மட்டும் நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடினார். மோசமான தோல்வியில் இருந்து தப்பிக்க இறுதிக் கட்டத்தில் பந்துவீச்சாளர்கள் மஹ்மத்துல்லா 20 ரன், மஹேதி ஹசன் 17 ரன், முஸ்தபிஷூர் ரஹ்மான் 20 ரன்கள் எடுத்து அணியை காப்பாற்றினர்.
42 புள்ளி 2 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது. அபாரமாக விளையாடிய நெதர்லாந்து வீரர்கள் வங்கதேசத்தை எளிதில் சுருட்டி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டனர். அதிகபட்சமாக பவுல் வென் மீக்ரென் 4 விக்கெட்டும், பாஸ் டி லிடீ 2 விக்கெட்டும், அர்யன் தத், லோகன் வன் பீக், காலின் ஆக்கர்மண் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையும் படிங்க: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!