உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில், ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 17ஆவது லீக் போட்டி நேற்று டவுன்டன் நகரில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக, டேவிட் வார்னர் 107 ரன்கள் விளாசினார். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது ஆமிர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, 308 ரன்கள் இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணியில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. அந்த அணி 33.5 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட்டுகளை இழந்தது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், கேப்டன் சர்ஃபராஸ் அகமது உடன் ஜோடி சேர்ந்த வஹாப் ரியாஸ், ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தார். இதனால், பாகிஸ்தான் அணி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை அவர்களது ரசிகர்கள் மத்தியில் தோன்றியது.
இந்நிலையில், அணியின் வெற்றிக்கு 35 பந்துகளில் 43 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வஹாப் ரியாஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். வஹாப் ரியாஸின் விக்கெட்டுதான் ஆட்டத்தின் போக்கை முற்றிலும் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக மாற்றியது.
அதன் பின்னர் களமிறங்கிய முகமது ஆமிர் ரன் ஏதும் எடுக்காமலும், சர்ஃப்ராஸ் அகமது 40 ரன்களில் ரன் அவுட் ஆகினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 45.4 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், பாகிஸ்தான் அணி இப்போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக இமாம்-உல்-ஹக் 53, முகமது ஹஃபிஸ் 46 ரன்கள் விளாசினர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பெட் கம்மின்ஸ் மூன்று, ரிச்சர்ட்சன், மிட்சல் ஸ்டார்க் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இப்போட்டியில் சதம் விளாசிய டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.